தொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துருஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழினுட்பம், மருத்துவத் தொழினுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.
தகவல் தொழில்நுட்பம்
(Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன.
இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும்
No comments:
Post a Comment