The dark web



இணையத்தின் மறுபக்கம் THE DARK WEB (TOR NETWORK)


டார்க் வெப் என்றால் என்ன?
நாம் இணையத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதனை மேற்பரப்பு இணையம் என்கிறோம். அதற்கு கீழ், ஆழமான இணைய பரப்பு ஒன்று இருக்கிறது. அதன் ஒரு பகுதி இருள் நிறைந்தது. அனைத்து சட்டவிரோத காரியங்களும் அங்குதான் நிகழ்கிறது.
இந்த இணைய பரப்பை நாம் வழக்கமான தேடல் தளத்தில் கண்டுபிடிக்க முடியாது.
டார்க் வெப் என்று அழைக்கப்படும் இதில், ஆயிரகணக்கான இணையதள பக்கங்கள் உள்ளன. இங்குதான் மொத்த கள்ளசந்தையும் இயங்குகின்றன.
இதில் எத்தனை விற்பனையாளர்கள் இயங்குகிறார்கள்...எத்தனை முகவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.

டார்க் வெப்
சுதிர் ஹிராய்மத், காவல்துறை இணை ஆணையர் (பூனே சைபர் செல்) "அதில் எவ்வளவு வணிகம் நடைப்பெறுகிறது என்று கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு முறை டார்க் வெப் கள்ளசந்தையில் தோராயமாக எவ்வளவு வணிகம் நடைபெறுகிறது என்ற தகவலை எஃப்.பி.ஐ வெளியிட்டது. அதில் நடைபெறும் மொத்த வணிகம் 1200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்" என்கிறார்.
'பட்டு சாலை' இணையதளம்தான் கள்ளசந்தைக்கு பிரசித்திப்பெற்றது. இது 2013 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ- ஆல் மூடப்பட்டது.

டார்க் வெப் எப்போது தொடங்கப்பட்டது?
கள்ளசந்தைக்காகவெல்லாம் `டார்க் வெப்` தொடங்கப்படவில்லை. இது தொடங்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு. தொடங்கியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர். ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளதான் இதனை தொடங்கினார்கள்.
ஆனால், இப்போது அது வேறுகாரணங்களுக்காகதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டார்க் வெப் மூலமாக, நாம் இப்போது சயனைட் மற்றும் ஆபத்தான போதை பொருட்களை வீட்டிலிருந்தப்படியே பெறலாம்.
காவல்துறை இணை ஆணையர், சுதிர் ஹிராய்மத், "இந்த டார்க் வெப் மூலமாக ஆயுதங்கள் பெற முடிகிறது. ஏன் பணத்திற்காக கொலை செய்யும் கொலைகாரர்களை கூட தொடர்பு கொள்ள முடிகிறது" என்கிறார்.
இந்தியாவில் இது பெரும்பாலும் போதை பொருள், குழந்தைகள் தொடர்புடைய பாலியல் விஷயங்களுக்காகதான் இந்த டார்க் வெப் பயன்படுகிறது என்கிறார்.
சட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுப்படுகிறது. அதனால், அறமற்ற இந்த தொழிலின் போக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
ஏமாற்றுகாரர்களும் இந்த `டார்க் வெப்` -ஐ பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் இதன் மூலமாக போலி பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்... இன்னப்பிற அடையாள அட்டைகளையும் பெற முடிகிறது.
இது அனைத்தையும் கடந்து, நாம் டார்க் வெப் மூலம் `ஹேக்கர்ஸ்`- உடன் கூட தொடர்பு கொள்ள முடிகிறது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு இந்த டார்க் வெப் மூலம் நிதி திரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பது கடினம்
வெங்காயத்தில் எப்படி பல அடுக்குகள் இருக்குமோ... அது போல பல அடுக்குகள் கொண்ட உலாவிகள் (பிரவுசர்ஸ்) உள்ளது என்கிறார் சுதிர் ஹிராய்மத்.
இது குறித்து விவரிக்கும் அவர், "சாதாரண உலாவிகள் மற்றும் தேடு தளங்களை கண்காணிக்க முடியும். கூகுள் நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டார்க் வெப்பை கண்காணிப்பது கடினம். சில மென்பொருட்களை பயன்படுத்தி, கணிணி ஐ.பி முகவரியை மறைத்துவிடுகிறார்கள். அதனால் யார் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுப்பிடிப்பது கடினம்." என்கிறார்.
இதனால், இதில் நடைப்பெறும் சட்டவிரோத சம்பவங்களை கண்காணிப்பது, அதில் ஈடுப்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது
பிட்காயினில் கட்டணம்
`டார்க் வெப்`உம் டிஜிட்டல் சந்தை போலதான். ஆனால், இரண்டுக்கும் உள்ள ஒரே விஷயம் டார்க் வெப் சட்டவிரோதமானது. அதில் விற்பதும், வாங்குவதும் குற்றச்செயல்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போல, வாடிக்கையார்களை ஈர்க்க டார்க் வெப் இணைய விற்பனை சந்தையிலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், பிற வாடிக்கையாளர்களுடன் நாம் உரையாடும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தி தருகிறது.
இதில் கட்டணத்தை பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலமாக செலுத்தலாம்.
கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை கண்காணிப்பது கடினம். அதனால், முறைகேடான விஷயங்களுக்கு அதில் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

Comments